வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பேராயரிடமே சீட்டிங் செய்த பெண் மதபோதகரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேராயர் காட்ஃப்ரே வாஷிங்டன் நோபிள். இவருக்கு மகன்களும், மகள்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில், பேராயர் நோபிளை செல்போனில் தொடர்புகொண்ட ஒரு பெண், தன்னை சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியா சிஸ்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும், நீங்கள் ஒரு பேராயர், நான் ஒரு மத போதகர். நமது இருவரின் குறிக்கோளும் ஒன்றுதான் என்று சொல்லி, நட்பை வளர்த்திருக்கிறார். பின்னர், ஒரு நாள் பேசும்போது, நான் ஏற்கெனவே கிரீஸ் நாட்டிலுள்ள மெடிட்டேரியன் ஷிப்பிங் கம்பெனியில்தான் வேலை பார்த்தேன். தற்போது அந்த கம்பெனியில் வேலைவாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையை உங்கள் மூத்த மகனுக்கு வாங்கித் தருகிறேன். மே 2-ம் தேதிக்குள் வேலையில் சேர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், மெடிக்கல் செக் அப், கம்பெனி விசாவுக்கு பணம் கட்ட வேண்டும். இதர செலவுகளுக்கு பணம் வேண்டும் என்று சொல்லி, வங்கிக் கணக்கு வாயிலாகவும், பெரியமேடு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தங்கும் விடுதியிலும் வைத்து மொத்தம் 8.50 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். பின்னர், மேற்கண்ட கம்பெனியின் பணி ஆணை ஒன்றை வழங்கி இருக்கிறார். ஆனால், விசா மட்டும் வரவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த பேராயர் நோபிள், மரியா சொன்ன மெடிட்டேரியன் கம்பெனி இணையதள பக்கத்திற்குச் சென்று விவரங்களை பார்த்திருக்கிறார். அப்போது, அந்த இணையதள பக்கத்தில் எங்கள் கம்பெனியின் பெயரைச் சொல்லி வேலை வாங்கித் தருவதாகக் கூறி யாரும் பணம் கேட்டால் தர வேண்டாம் என்று அறிவிப்பு இருந்தது. இதையடுத்து, அக்கம்பெனியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் பேராயர் நோபிள்.
அப்போது, அப்படி யாரையும் தாங்களுக்கு தெரியாது என்றும், குறிப்பிட்ட பெயரில் யாருக்கும் பணி ஆணை வழங்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம், மரியா வழங்கிய பணி ஆணை போலி என்பது தெரியவந்தது. எனவே, மரியாவை தொடர்பு கொண்டு, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார் பேராயர் நோபிள். அதற்கு, மரியா கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் பேராயர் காட்ஃப்ரே வாஷிங்டன் நோபிள் புகார் அளித்தார். இதன் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மரியா சிஸ்டர் என்பவரின் உண்மையான பெயர் மரியா செல்வம் என்பதும், 42 வயதாகும் இவர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், மத போதகராக செயல்பட்டுவரும் மரியா, சர்ச்சுகளுக்கு வருவோரிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்வதை தொழிலாக செய்து வருவதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மரியா மீது மோசடி உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.