விழுப்புரம் அருகே உயிரிழந்த பட்டியலின பெண்ணின் உடலை புதைக்க இடம் இல்லாததால், அவரது உறவினர்கள் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த அவலம் அரங்கேறி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இங்கு, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமுதாய மக்களும் வசித்து வருகிறார்கள். ஆனால், இங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கு இதுவரை நிலையான இடுகாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், இறந்தவர்களின் உடலை ஏரி, ஓடை, குளம் போன்ற பகுதிகளில் புதைத்து வந்திருக்கிறார்கள். ஆகவே, இது தொடர்பாக விக்கிரவாண்டி தாசில்தார் மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு இக்கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் பலமுறை மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை நிலையான இடுகாடு அமைத்துத் தராததோடு, சூழலுக்கு ஏற்றவாறு ஒரு சில இடங்களை தற்காலிகமாக அமைத்துக் கொடுத்து வந்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு கொட்டியாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவரின் மனைவி அமுதா உயிரிழந்து விட்டார். அவரது, உடலை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லை. எனவே. 19-ம் தேதி விழுப்புரம் ஆர்.டி.ஓ. தலைமையில் ஒரு இடத்தை தேர்வு செய்து உடலை அடக்கம் செய்வதற்கான பணியை மேற்கொண்டனர். அப்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து விட்டனர். இதையடுத்து, பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து, இன்று மாலை அமுதாவின் உடல், அவ்வூரின் சாலையோரத்தில் எரிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, பட்டியலின மக்கள் தங்களுக்கு நிலையான இடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக, இரு சமூகத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண, எதிர்வரும் 26-ம் தேதி சமரசக்கூட்டம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டி இருப்பதாக பீற்றிக் கொள்கிறது தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு. ஆனால், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்யக் கூட இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க முடியாத அவல நிலைதான் இருக்கிறது. ஆகவே, இதை சுட்டிக்காட்டி தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.