காஷ்மீரில் டிக் டாக் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் அம்ரீன் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. முதலில், பாதுகாப்புப் படையினரை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த பயங்கரவாதிகள், தற்போது காஷ்மீர் பண்டிட்டுகள், சீக்கியர்கள், காவல்துறையில் பணிபுரியும் இஸ்லாமியர்கள், இஸ்லாம் சட்டத்திட்டங்களை மீறுவதாக கருதப்படும் முஸ்லிம்கள் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகத்திற்குள் புகுந்து காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட் என்பவரை கொலை செய்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் போலீஸ்காரராக இருக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சைஃபுல்லா காத்ரி என்பவரை சுட்டுக் கொன்றனர். நேற்று இரவு டிக் டாக் மற்றும் தொலைக்காட்சி நடிகை அமிரீன் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
35 வயதான அம்ரீன் பட் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த இரு வருடங்களாக டிக் டாக்கில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்திருக்கிறார். இதன் மூலம், அம்ரீன் பட் காஷ்மீர் மாநிலம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இவர், டிக் டாக் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பது இஸ்லாமிய அடிப்படைவாத கும்பலுக்கு பிடிக்கவில்லை. இதனால், டிக் டாக் செய்வது மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அம்ரீன் பட்டுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார்கள். ஆனாலும், அம்ரீன் பட் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வந்திருக்கிறார். இதனால், பயங்கரவாதிகள் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நேற்று இரவு அம்ரீன் பட் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது, பைக்கில் வந்த இரு பயங்கரவாதிகள், அம்ரீன் பட் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இதில், பல்வேறு இடங்களில் குண்டு துளைத்ததில் அம்ரீன் பட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும், அம்ரீன் பட்டின் 10 வயது மருமகன் ஃப்ராகன் சுபைர் வெளியே வந்து பார்த்திருக்கிறார். அப்போது, இரக்கமே இல்லாத பயங்கரவாதிகள் அந்த சிறுவனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார், ஃபர்கானை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கரவாத செயலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.