ஜம்மு காஷ்மீரில் டிக் டாக் மற்றும் தொலைக்காட்சி நடிகையை சுட்டுக்கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேரும் 24 மணி நேரத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், போலீஸாரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாதிகள், சமீபகாலமாக ஹிந்து பண்டிட்கள் மற்றும் இஸ்லாமிய மார்க்கப்படி நடக்காத முஸ்லிம்கள் மற்றும் போலீஸாக பணிபுரியும் முஸ்லிம்கள் ஆகியோரை குறிவைத்தும் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, கடந்த 15 தினங்களுக்கு முன்பு புத்காம் மாவட்டதிலுள்ள தாசில்தார் அலுவலகத்தில் ஹிந்து பண்டிட்கள் மறுவாழ்வு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஹிந்து பண்டிட் ராகுல் பட், பயங்கரவாதிளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீர் போலீஸில் பணிபுரிந்து வந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சைஃபுல்லா காத்ரி, பயங்கரவாதிளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல, 25-ம் தேதி இரவு வீட்டு முன்பு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த டிக் டாக் பிரபலமும், தொலைக்காட்சி நடிகையுமான அம்ரீன் பட், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்புப் படையினரும், மாநில போலீஸாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நடந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் நடிகை அம்ரீன் பட்டை கொலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஐ.ஜி. விஜயகுமார் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 7 பேர் என 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், நடிகை அம்ரீன் பட்டை கொலை செய்த பயங்கரவாதிகள் 2 பேரும் அடக்கம்.