பிரபல பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாம் மாநிலம் மான்சா மாவட்டம் மூஸ்வாலாவில் 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி பிறந்தவர் சுப்தீப் சிங் சித்து. பி.டெக். மின்சார பொறியியல் பட்டதாரியான இவர், பாடலாசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளரான இவர், தனது பாடல் வரிகளில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பிரயோகிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பட்டப்படிப்பை முடித்த கையோடு, கனடா நாட்டுக்குச் சென்று விட்டார். 2018-ல் மீண்டும் பஞ்சாப் திரும்பியவர், பாடகர், நடிகர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்தார். இதன் பிறகு, தனது பெயரை சித்து மூஸ்வாலா என்று மாற்றிக் கொண்டார். இவரது பாடல்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வந்தது. இந்த சூழலில், கடந்தாண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மான்சா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில்தான், பிரபல பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சித்து மூஸ்வாலா இன்று மாலை மான்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சித்து மூஸ்வாலாவும் அவரது நண்பர்கள் இருவரும் ஜீப்பில் வெளியில் சென்றுவிட்டு ஜவஹர்கே கிராமம் அருகே வந்திருக்கிறார்கள். அப்போது, அவர்களது ஜீப் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கல். இதில், சித்து உட்பட மூவரும் பலத்த காயமடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மான்சா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், சித்து ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். சித்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பஞ்சாப் மாநில அரசு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி இருந்தது. ஆனால், பஞ்சாப்பில் புதிதாக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, போலீஸ் பாதுகாப்பை நேற்று திரும்ப பெற்றது. போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு, சித்துவுக்கு மட்டுமல்ல, ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே கடந்த ஏப்ரல் மாதம் 184 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றது. நேற்று சித்து உட்பட 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றது. இவர்களில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களும் அடக்கம். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பஞ்சாப் அரசுக்கு எதிராக போராடத் தொடங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், சித்து குடும்பத்தினரையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தினர். சித்துவை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார்கள் என்கிற விபரம் தெரியவில்லை.