ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று பள்ளியில் புகுந்து ஆசிரியையை சுட்டுக்கொன்ற பங்கரவாதிகள், இன்று வங்கிக்குள் புகுந்து அதிகாரியை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டது முதலே பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆரம்பத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாதிகள், சமீபகாலமாக காஷ்மீர் பண்டிகள், மாநில போலீஸில் பணிபுரியும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இதர சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமிய சட்டத்தை மீறி நடக்கும் முஸ்லீம்கள் ஆகியோரை குறிவைத்தும் தாக்குதல் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில், கடந்த மாதம் 12-ம் புத்காம் மாவட்டம் ஷேக்புரா பகுதியிலுள்ள தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஹிந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். பின்னர், கடந்த மாதம் 24-ம் தேதி ஸ்ரீநகர் மாவட்டம் சௌரா பகுதியைச் சேர்ந்த காஷ்மீர் மாநில போலீஸில் பணிபுரிந்துவந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சஃபியுல்லா காத்ரி என்பவரை, பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். அப்போது, பயங்கரவாதிகள் ஈவு இரக்கமின்றி அவரது 7 வயது மகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், மே 27-ம் தேதி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த டி.வி. சீரியல் நடிகையும், டிக் டாக் பிரபலமுமான அம்ரீன் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில், அவரது 10 வயது மருமகனும் துப்பாக்கியால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குல்காம் மாவட்டம் கோபால்பூராவில் உள்ள பள்ளி ஒன்றுக்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ரஜினி பாலா என்பவரை சுட்டுக்கொலை செய்தனர். இவர், கணவர் மற்றும் மகளுடன் சம்பா பகுதியில் வசித்து வந்தார். இப்படி தொடர்ந்து ஹிந்து பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதால், 24 மணி நேரத்திற்குள் அரசு தங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவில்லை எனில், காஷ்மீரை விட்டு வெளியேறப் போவதாக 4,000 காஷ்மீர் பண்டிட்கள் அறிவித்தனர். அதேபோல, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து, வேறு இடத்துக்கு தங்களுக்கு இடமாறுதல் அளிக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள ஹிந்து பண்டிட் முகாம்கள், ஹிந்து பண்டிட்கள் அதிகம் வசிக்கும் ஸ்ரீநகரின் இந்திரா நகர் பகுதி ஆகியவை சீல் வைக்கப்ட்டன. மேலும், அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதோடு, பஸ்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பப்ட்டன. இந்த சூழலில், இன்று காலை ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு வங்கிக்குள் நுழைந்த பயங்ரவாதிகள் மேலாளர் விஜய் குமாரை சுட்டுக்கொலை செய்தனர். உயிரிழந்த விஜய்குமார் எலாகுவாய் தெஹாதி வங்கியில் பணியாற்றி வந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஹனுமன்கர் பகுதியில் வசித்து வந்தார். இதனால், காஷ்மீரில் ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.