‘தம்பி… சாரி, தம்பி சார்’… ‘அண்ணா’… வைரலாகும் கமல், சூர்யா ட்விட்!

‘தம்பி… சாரி, தம்பி சார்’… ‘அண்ணா’… வைரலாகும் கமல், சூர்யா ட்விட்!

Share it if you like it

நடிகர்கள் கமல்ஹாசனும், சூர்யாவும் மாறி மாறி பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களாக வலம் வருபவர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். இவரது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் ‘விக்ரம்’. இந்த படம் சிறப்பாக இருப்பதாக ஒரு தரப்பினரும், டயம் வேஸ்ட் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். இப்படி இரு வேறு விமர்சனங்களை இப்படம் பெற்றிருந்தாலும், நடிப்பைப் பொறுத்தவரை கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இதில் ஹைலைட் என்னவென்றால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சூர்யாவும் ‘ரோலக்ஸ்’ என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். அதாவது, போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவன் கதாபாத்திரம். இப்படம் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில், சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கமல்ஹாசனை டேக் செய்து வெளியிட்டிருக்கும் பதிவில், “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!? உங்களுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவு நனவாகி இருக்கிறது. இதை சாத்தியப்படுத்தியதற்கு லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. உங்கள் அனைவரின் அன்பால் உள்ளம் பூரித்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவை டேக் செய்து பதிலளித்திருக்கும் கமல்ஹாசன், “இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டியது என்பது உங்களுக்குத் தெரியும். அன்பு, அது உங்களிடம் ஏற்கெனவே இருக்கிறது. அது இப்போது அதிகரித்திருக்கிறது. உங்களுக்கு ஆல் தி வெரி பெஸ்ட் தம்பி. சாரி, தம்பி சார்” என்று பதிவிட்டிருக்கிறார். அதாவது, விக்ரம் படத்தில் தன்னை சார் என்றுதான் அழைக்க வேண்டும் என்று கமலுக்கு சூர்யா கட்டளையிடுவார். ஆகவே, அதை சூசகமாக வெளிப்படுத்தி கிண்டல் செய்திருக்கிறார் கமல்.

இதையடுத்து, கமலுக்கு பதிலளித்திருக்கும் சூர்யா, “அண்ணா…” என்று மட்டும் பதிவிட்டு, பக்கத்தில் ஒரு சிரிப்பு ஸ்மைலியை போட்டிருக்கிறார். இப்படி இருவரும் மாறி மாறி பதிவிட்டு வரும் ட்விட்டர் பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it