இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் தான் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள் என மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
தி.மு.க அரசு ஹிந்து விரோத நடவடிக்கையை எடுத்தால், அதற்கு எதிராக முதன் முதலில் ஒலிக்கும் குரலாக இருப்பவர் மதுரை ஆதீனமான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்தவகையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் கடந்த (4.6.2022) அன்று மதுரை பரவை ஆகாஷ் மகாலில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், கலந்து கொண்ட மதுரை ஆதீனம் பேசிய காணொளி ஒன்று தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை ஆதீனம் பேசியதாவது;
செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு மதுக்கடைகளின் ஆதிக்கம் இங்கே அதிகரித்துள்ளது. கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என நினைக்கிறார்கள். நாங்கள் ஏன் அரசியல் பேச கூடாது? ஆதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? இந்து அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள். உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது. திருவாசகத்தைக் கூட அரசியல்வாதிகள் திருடிவிட்டார்கள். திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும்.
கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டுள்ளனர். குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது. ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள். இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள். `திராவிட பாரம்பரியம்’ என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.