காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் ஹிந்துக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ஹிந்துக்கள் வெளியேறி வருகின்றனர். எனவே, பாதுகாப்புப் படையினர், ராணுவம், மாநில போலீஸார் இணைந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் களமிறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களில் மட்டும் 7-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கண்டி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில், போலீஸார், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு கண்டி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். இதையடுத்து, பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர், பாகிஸ்தான் தீவிரவாதி எதற்காக காஷ்மீருக்கு வந்தான்? மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள பானிபோரா வனப்பகுதியில் நேற்று இரவு நடந்த என்கவுன்ட்டரில் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கொல்லப்பட்டான்.
இதனிடையே, பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையில், ஹிந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது ‘காஷ்மீர் சுதந்திர போராளிகள்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த அமைப்பினர் தற்கொலைப் படைகளை போல இல்லாமல், சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கிகளை பயன்படுத்தி, கிட்டத்திலிருந்து சுட்டுக் கொல்லும் வகையைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான், தாலுகா அலுவலகத்தில் புகுந்து காஷ்மீரி பண்டிட் ராகுல் பட், மாநில போலீஸ்காரர் சைபுல்லா காத்ரி, சீரியல் மற்றும் டிக் டாக் நடிகை அம்ரீன் பட் உள்ளிட்டவர்களை சுட்டுக் கொன்றவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் பகுதியை நன்கு அறிந்த உள்ளூர் இளைஞர்களாக இருக்கலாம் என்று உளவுத்துறையினர் கருதுகின்றனர்.