பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு பாடம் நடத்திய ஆசிரியை பொதுமக்கள் அதிர்ச்சி.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு காவல்நிலையம், மருத்துவமனை என திடீர் திடீர் என்று ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். அந்தவகையில், ’எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டத்தின் துவக்க விழா சென்னையை அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி மகேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதல்வர் சென்று இருந்தார், அங்குள்ள, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்து உரையாடினார். இதையடுத்து, பள்ளி முழுவதையும் சுற்றி பார்த்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அந்தவகையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அறைக்குள் சென்ற முதல்வர் மாணவர்களின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவருக்கு பின் இருக்கையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அமர்ந்தார். இதனைதொடர்ந்து, தமிழ் ஆசிரியரிடம் 10-ம் வகுப்பு பாடம் நடத்துமாறு முதல்வர் கூறினார்.
இதையடுத்து, தயாராக இருந்த தமிழ் ஆசிரியை, இலக்கணத்தின் வகை குறித்து பாடம் எடுத்தார். அப்போது, மாணவர்களுக்கு தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் எத்தனை என்பது குறித்து பாடம் நடத்தினார். மேலும், ‘உயிர் எழுத்துக்கள் எத்தனை?’ என, மாணவர்களிடம் ஆசிரியை கேட்டார். மாணவர்கள் திருதிருவென விழித்த உடன் உஷாரான ஆசிரியை ’12 எழுத்துகள்’ என்று கூறி உடனே சமாளித்து இருந்தார். திடீர் ஆய்வினை மேற்கொண்ட முதல்வர், அமைச்சர் மற்றும் பள்ளிகல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு பாடமா? என யாரும் கேள்வி கேட்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட். இக்காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்களும், கல்வியாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.