நிஜத்தில் அரங்கேறிய ‘அசுரன்’ சினிமா காட்சி: மகனுக்காக நாகூர்மீரான் காலில் விழுந்த தந்தை உயிரிழப்பு!

நிஜத்தில் அரங்கேறிய ‘அசுரன்’ சினிமா காட்சி: மகனுக்காக நாகூர்மீரான் காலில் விழுந்த தந்தை உயிரிழப்பு!

Share it if you like it

‘அசுரன்’ சினிமா பாணியில் மகனுக்காக நாகூர்மீரான் உள்ளிட்டோர் காலில் விழுந்த தந்தை, மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது பிச்சனகோட்டகம் கிராமம். இங்குள்ள பத்தரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 10-ம் தேதி நடந்தது. அப்போது, நடராஜன் மகன் நாகூர்மீரானுக்கும், அஞ்சுக்கண்ணு மகன் கலைச்செல்வனுக்கும் தகராறு ஏற்பட்டு, அடிதடி வரை சென்றிருக்கிறது. இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த பஞ்சாயத்தார், கலைச்செல்வனுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு பணம் கட்டுவதற்கான வசதி கலைச்செல்வன் குடும்பத்தினரிடம் இல்லை. ஆகவே, 10,000 ரூபாய் அபராதம் கட்டும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. எனவே, அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என்று பஞ்சாயத்தாரிடம் மன்றாடி இருக்கிறார் கலைச்செல்வன்.

இதையடுத்து, அபராதத் தொகையை கட்ட முடியாவிட்டால், நாகூர்மீரான் மற்றும் ஊர் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ சினிமா பாணியில் கூறியிருக்கிறார்கள் பஞ்சாயத்தார். ஆனால், கலைச்செல்வன் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். பொதுவாக, ஏதாவது பிரச்னை என்று வரும்போது ஊர் பஞ்சாயத்தார் விதித்த அபராதத்தைக் கட்ட வேண்டும். அல்லது அதற்கு பதிலாக ஊர் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது கிராமத்து வழக்கம். இல்லாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே, இதற்கு பயந்து கொண்டு மகனுக்கு பதிலாக தான் ஊரார் காலில் விழுவதாகக் கூறி தன்னை விட வயதில் சிறியவரான நாகூர்மீரான் உள்ளிட்ட ஊர் பஞ்சாயத்தார் காலில் விழுந்திருக்கிறார் கலைச்செல்வனின் 65 வயதான தந்தை அஞ்சுக்கண்ணு.

இந்த நிலையில், அஞ்சுக்கண்ணு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதையடுத்து, பஞ்சாயத்தார் காலில் விழுந்ததால்தான் அஞ்சுக்கண்ணு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நெஞ்சு வலியால் இறந்து விட்டார் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், அஞ்சுக்கண்ணுவை காலில் விழ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் சாலையில் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பஞ்சாயத்தார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அஞ்சுக்கண்ணுவின் உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே இரண்டாவது நாளாக நேற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அஞ்சுக்கண்ணுவின் மகன் கலைச்செல்வன் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, கலைச்செல்வனை தடுத்து நிறுத்தினர். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


Share it if you like it