ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இளையராஜாவும் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தாருடன் நேற்று மாலை வந்தார். அவரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், இரவு அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்தார்கள். இன்று அதிகாலை புறப்பட்டு ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்தவர்கள், பொது தரிசனத்தில் குடும்பத்தினருடன் ஸ்படிக லிங்க தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கவர்னர் வருகையையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு தனது குடும்பத்தாருடன் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்
இசைஞானி இளையராஜா தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, சென்னை மற்றும் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து, மதுரையில் நாளை இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்திருக்கிறார் இளையராஜா. இவர், இன்று அதிகாலை 6 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பக்தர்களோடு பக்தராக நின்று சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி மற்றும் அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என சுமார் 45 நிமிடங்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.