நெல்லை அருகே விநாயகர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்தில் ஆண்டவர் 2-வது தெருவில் மந்திரமூர்த்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே இஸ்லாமியர்களின் பள்ளிவாசலும் இருக்கிறது இந்த சூழலில், விநாயகர் கோயில் கொடை விழா நாளை நடைபெறுவதாக இருந்தது. இதற்காக பந்தல் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தன. பணிகள் முடிந்து நேற்று இரவு அனைவரும் சென்று விட்டனர். இன்று காலை வந்து பார்த்தபோது, கோயிலின் முன்புறம் இருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, கோயிலில் குவிந்த இந்து முன்னணி அமைப்பினர் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்த போலீஸாரும், வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு, கொடைவிழா நடத்துவது தடைபடக் கூடாது என்பதற்காக புதிய விநாயகர் சிலை ஒன்றையும் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஆனால், அச்சிலையும் வேறொரு கோயிலில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது என்பதோடு, சிலை சேதமடைந்தும் இருந்தது.
எனவே, சிலை வாங்க மறுத்துவிட்ட இந்து முன்னணி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விநாயகர் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். கோயில் கொடை விழா நாளையும், மறுநாள் பக்ரீத் விழாவும் நடைபெறவிருந்த சூழலில், விநாயகர் சிலை உடைக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.