ஹிந்து கடவுள் போட்டோ அச்சிடப்பட்ட பேப்பரில் சிக்கன் மடித்துக் கொடுத்ததை தட்டிக் கேட்ட போலீஸாரை கத்தியால் குத்த முயன்ற தலிப் ஹுசைனை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தலிப் ஹூசைன். இவர், கடந்த சில ஆண்டுகளாக சிக்கன் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல கடந்த வாரமும் சிக்கன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது, சிக்கனை மடித்துக் கொடுக்க அவர் பயன்படுத்திய பேப்பர்களில் ஹிந்து கடவுள்களின் போட்டோ இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஹிந்துக்கள் சிலர், மேற்கண்ட பேப்பரை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும், இதுகுறித்து போலீஸிலும் புகார் செய்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், தலிப் ஹுசைனிடம் விசாரணை நடத்தினர். அதற்கு, தான் எப்போதும் போலவே சிக்கன் வியாபாரம் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். உடனே போலீஸார், ஹிந்து கடவுள்கள் போட்டோ அச்சிடப்பட்ட பேப்பரில் சிக்கன் மடித்துக் கொடுப்பதாக சிலர் புகார் செய்திருப்பதால் விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால், போலீஸ் விசாரணைக்கு வர மறுத்த தலிப் ஹுசைன், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும், சிக்கன் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியைக் காட்டி போலீஸாரை மிரட்டி இருக்கிறார். எனவே, தலிப் ஹுசைனை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீஸார், மதம், இனத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்கவித்தல், வேண்டுமென்றே மத உணர்வுகளை அவமதித்து பிரச்னையை ஏற்படுத்துதல், கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே, மத விவகாரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஹிந்து கடவுள்கள் போட்டோ அச்சிடப்பட்ட பேப்பரில் இஸ்லாமியர் ஒருவர் சிக்கன் விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.