அமர்நாத் குகைக் கோயிலில் அமைந்திருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற பக்தர்கள், திடீர் மேக வெடிப்பு காரணமாக நேற்று மாலை பெய்த பலத்த மழையில் சிக்கிக் கொண்டனர். இதில், 16 பேர் பலியாகி விட்ட நிலையில், மாயமான 40-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது அமர்நாத் குகைக் கோயில். இங்கு இயற்கையாக உருவாகிவரும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் சென்று வருகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரைக்கு நிகழாண்டு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் வரை பக்தர்கள் சென்று வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 30-ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்கியது. இதுவரை 72,000 பேர் தரிசனம் செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், அப்பகுதியில் திடீரென வானிலை மோசமானது. இதனால், அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, மலையேறி இருந்த பக்தர்கள் ஆங்காங்கே டென்ட்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சூழலில், நேற்று மாலை 5:30 மணிக்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக, மலைப் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் டென்ட்களில் தங்கியிருந்த பலர் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணும், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 40 பேர் வரை காணாமல் போயிருந்ததாகவும் கூறப்பட்டது. இதில் 29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், இவர்களில் 9 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களும், உயிரிழந்தவர்களின் உடல்களும் ஸ்ரீநகரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். மீட்பு பணிகளில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒரு ஹெலிகாப்டர் சண்டிகரில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் விமானப் படை தெரிவித்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, குகைக் கோயில் அருகே சுமார் 15,000 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருப்பதாக இந்தோ திபெத் எல்லை போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். அமர்நாத் பக்தர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையை 011-23438252, 011-23438253 என்ற எண்களிலும், காஷ்மீர் பிரிவை 0194-2496240 என்ற எண்ணிலும், அமர்நாத் குகைக் கோயிலை 0194-2313149 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.