ஜிஹாதிகளிடமிருந்து ஹிந்துக்களை பாதுகாக்கும் வகையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு புதிய ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மாதம் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, சிவ லிங்கத்தை இழிவுபடுத்திய இஸ்லாமிய பேச்சாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முகமது நபி பற்றிய கருத்தை சுட்டிக்காட்டி பேசினார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேசமயம், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். அந்த வகையில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்ட ஆந்திர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த உமேஷ் கோல்ஹே, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால் ஆகியோர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு புதிய ஹெல்ப்லைன் எண்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கிறது. இதன் முதல் கட்டமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸா, கர்நாடகா, டெல்லி, இமாச்சலப் பிரதேசம், லடாக், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலுங்கானா, அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 35 பிராந்தியங்களுக்கு எண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து வி.ஹெச்.பி.யின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், “நாட்டில் பயங்கரவாத சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பீதியை உருவாக்குவதற்காக ‘ஜிஹாதி சக்திகள்’ கொடூரமான முறையில் மக்களைக் கொன்று வருகின்றனர். அமராவதியில் உமேஷ் கோல்ஹேவும், உதய்பூரில் கன்ஹையா லால் கொலையும் இதற்கு உதாரணம். எந்த அமைப்பும், காவல்துறையும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆகவே, இதுபோன்ற நபர்களுக்கு வி.ஹெச்.பி.யின் பஜ்ரங்தள் முன்னணி நீதியும் உதவியும் கிடைப்பதை உறுதி செய்யும். இவை மக்களுக்கும், அமைப்புக்கும் இடையே பாலமாக மாறும். இவை அனைத்தும் ஜனநாயக வழியில் செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், “ஜிஹாதிகளிடமிருந்து ஹிந்துக்களை பாதுகாப்பதற்காக வி.ஹெச்.பி. ஹெல்ப்லைனை தொடங்கி இருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயங்கரவாதம் மற்றும் வன்முறை சூழலை பரப்ப முயற்சிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளுக்காக கொலை மிரட்டல் விடுப்பதை ஹிந்து சமூகம் பொறுத்துக் கொள்ளாது. இதுபோன்ற மிரட்டல்கள் வந்தால் காவல் நிலையங்களை அணுகுமாறு ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தினரையும் வி.ஹெச்.பி. கேட்டுக்கொள்கிறது. காவல்துறை உதவி செய்ய மறுத்தால், வி.ஹெச்.பி. மற்றும் அதன் இளைஞர் அணியான பஜ்ரங்தள் உறுப்பினர்கள் உடனடியாக ஹிந்துக்களுக்கு உதவ வருவார்கள்” என்றார்.