தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடரும் பட்சத்தில், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்று எஸ்.பி.ஐ. பொருளாதார ஆய்வறிக்கை குழு கணித்திருக்கிறது.
எஸ்.பி.ஐ. தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தலைமையிலான குழுவினர் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த ஒரு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வறிக்கையில், ”பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும்போது, 2014-ம் ஆண்டில் இந்தியா உலகளவில் 10-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது. கடந்தாண்டு 6-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா, நிகழாண்டு பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கிறது.
இதே பொருளாதார வளர்ச்சி தொடரும் பட்சத்தில், மேலும் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும். மேலும், 2022-23-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதம் வளர்ச்சியை கண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் நடப்பு நிதியாண்டில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.7% முதல் 7.7% வரை இருக்கும். உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நீடித்தால் 6% முதல் 6.5% வளர்ச்சி என்பது இயல்பாக இருக்கும்.
சீனா தற்போது மந்தநிலையை எதிர்கொண்டு வருவதால், இந்தியாவில் புதிய முதலீடுகள் அதிகரிக்கக் கூடும். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 14 மாடலின் பாக உற்பத்தியை இந்தியாவிலிருந்து, உலகளவில் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்திருக்கிறது. கடந்த 2 நூற்றாண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது. 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீனா வளர்ச்சி பாதையில் பயணித்து 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது. அதேபோல, இந்தியாவும் சரியான பொருளாதார கொள்கையை பின்பற்றி, புவிசார் அரசியலில் மறுசீரமைப்பு செய்தால், தற்போதைய மதிப்பீடுகள் மேலும் உயரக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.