தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் குடும்பத்தினர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்குமார். சர்ச்சைகளுக்கு பேர் போனவர். சிறு பிள்ளைத் தனமாக செயல்படக் கூடியவர் என்றெல்லாம் பேர் எடுத்தவர். இவர், கடந்த மாதம் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரியை புனரமைக்கும் பணியை தொடங்கி வைக்க வருகை தந்தார். அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூமிபூஜைக்கு ஏற்பாடு செய்து, பூஜைகளை நடத்துவதற்காக அர்ச்சகர் ஒருவரையும் வரவழைத்திருந்தனர். இதைக் கண்ட செந்தில்குமார், ஹிந்து மத பூசாரி மட்டும் வந்திருக்கிறார். எங்கே கிறிஸ்தவ மதகுரு, எங்கே இஸ்லாமிய மதகுரு என்று கேள்வி கேட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சண்டைப் போட்டார். இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எம்.பி. செந்தில்குமாருக்கு எதிராக ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் கச்சைகட்டின.
ஆனாலும், செந்தில்குமார் சட்டை செய்யவில்லை. ஹிந்து மத சடங்குகளைப் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு, தனது செயலை பாராட்டி திராவிட கும்பல் போட்ட பதிவுகளை தனது ட்விட்டரில் எடுத்துப் போட்டு, தனக்குத்தானே புளகாங்கிதம் அடைந்து வந்தார். இந்த சூழலில், விநாயகர் சதுர்த்தி விழா வந்தது. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவிக்காத நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது செந்தில்குமாருக்கு. தி.மு.க. தலைவர்கள் யாரும் வாழ்த்துத் தெரிவிக்காத நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது தவறு என்கிற ரீதியில் தனது ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவோ, இது இந்து மக்களுக்கான துறை. ஆகவே, வாழ்த்துத் தெரிவிக்க வேண்டியது இத்துறையின் கடமை என்று சொல்லி செந்தில்குமாரின் மூக்கை உடைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து, செந்தில்குமாரை நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு பூஜைகளை செய்திருக்கிறார்கள். அதாவது, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமையாந அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்தான் துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நெட்டிசன்கள், செந்தில்குமாரை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர். அதாவது, தி.மு.க.வினர் அனைவரும் தலைவர் கருணாநிதி வழியில் நடக்க வேண்டும் என்று செந்தில்குமார் தொண்டை தண்ணீர் வற்ற கதறிவருகிறார். ஆனால், தி.மு.க.வின் அதிகார வர்க்கமாக இருக்கும் கிச்சன் கேபினட்டும், மருமகனும் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்கள். இதை வைத்து செந்தில்குமாரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.