இந்தியா வந்திருக்கும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாரத பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
வங்கதேசத்தின் பிரதமராக இருக்கும் ஷேக் ஹசினா, 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அவரை, பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஷேக் ஹசினா, தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதன் பிறகு, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குஷியாரா ஆற்று நீரை பங்கிட்டுக் கொள்ள, இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், வங்கதேசத்தின் நீர் மேலாண்மை அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வங்கதேச ரயில்வே பணியாளர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, வங்கதேச நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், விண்வெளி மற்றும் ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றவும் பருவநிலை மாற்றம் மற்றும் சுந்தரவனக் காடுகள் போன்ற பாரம்பரிய இடங்களைக் காக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.