பாரத பிரதமர் மோடிக்கு குஜராத்தில் 51 அடியில் இரும்புச் சிலை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுவதுமுள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் பிரதமர் மோடியின் நலன் விரும்பிகள் பல்வேறு நிகழ்வுகளுக்கும், நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். டெல்லியில் ‘ஆர்டர் 2.1′ என்கிற பிரபல ஹோட்டலின் உரிமையாளரும், மோடியின் தீவிர ரசிகருமான சுமித் கலாரா, தனது ஹோட்டலில் சிறப்பு மெனுவாக 56 வகையான உணவுகள் அடங்கிய ’56 இன்ச் தாலி’ என்கிற உணவுப் போட்டியை அறிமுகம் செய்திருந்தார். இப்போட்டி 16 நாட்களுக்கு நடைபெறும் எனவும், 40 நிமிடங்களுக்குள் உணவு அருந்தும் போட்டியாளருக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தமிழகத்திலும் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களால் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில்தான், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தின் சர்வகுண்டலா என்ற பகுதியில் பிரதமருக்கு 51 அடியில் இரும்பு சிலை அமைக்க நேற்று பூமிபூஜை நடந்திருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவர் சுரேஷ் பன்சூரியா செய்திருந்தார். மேலும், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்பகுதி தொழிலதிபர்களுடன் இணைந்து 400 ஜோடிக்கு இலவச திருமணமும் செய்து வைத்திருக்கிறார். தவிர, பிரதமர் மோடியின் நலனுக்காக யாகம் ஒன்றையும் நடத்தினார். இந்த யாகத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.