தமிழகத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்திருக்கிறார்.
பாரத பிரதமராக 2014-ல் பதவியேற்ற மோடி, ஒரு சில வருடங்களிலேயே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். தமிழ்தான் உலகின் பழமையான மொழி என்று கூறிவந்தார். குறிப்பாக, பாரதியாரின் பாடல் வரிகளையும், திருக்குறளையும் அடிக்கடி மேற்கோள் காட்டி பேசி வருகிறார். அந்த வகையில், 2018-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவில், பாரதியின் “எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற பாடலை பாடி அசர வைத்தார். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவில், நீரின்றி அமையாது உலகு என்கிற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இதன் பிறகு, எங்கு பேசினாலும் வணக்கம் என்று சொல்லி தனது பேச்சை தொடங்கி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.நா. சபையில் பேசும்போது, புறநாற்றுப் பாடலை சுட்டிக்காட்டி தமிழை தலைநிமிரச் செய்தார்.
இந்த நிலையில்தான், பிரதமர் மோடி தமிழ் மீதும், தமிழகம் மீதும் தனி மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், “தமிழகம் என்றாலே பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு. ஒகி புயலின்போது கடைசி மீனவர் உயிருடன் கரை திரும்பும் வரை மீட்பு பணி நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், என்னை தமிழகத்தின் கடைக்கோடி மற்றும் கேரள எல்லைக்கு அனுப்பியது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது. அப்போதும், என்னை நேரடியாகச் சென்று இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். அந்தளவுக்கு தமிழகம் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்” என்றார்.