தனது தாயாரை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவி செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி நன்றி தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க. எம்.பி.யும், அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழியின் தாய் ராஜாத்திக்கு, சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆகவே, அவரை அவசர சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கனிமொழிக்கு போன் செய்து, அவரது தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார். மேலும், கனிமொழியும், அவரது தாயாரும் வெளிநாடு செல்லவும், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் மத்திய அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
அதோடு, ஜெர்மனியில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக கனிமொழிக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யுமாறும் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கனிமொழியும், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் சிலரும் ஜெர்மனிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மத்திய அரசுத் தரப்பில் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஜெர்மனியிலுள்ள இந்திய தூதரகம் மூலம், அவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், ஜெர்மனியில் சிகிச்சை முடிந்து கனிமொழி, அவரது தாயார் மற்றும் உறவினர்களும் சென்னை திரும்பினர்.
இதைத் தொடர்ந்து, கனிமொழியும், அவரது தாயார் ராஜாத்தியும் அமித்ஷாவிற்கு போன் செய்து, உதவிகளுக்காக நன்றியை தெரிவித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியினராகவும், தங்களை எவ்வளவு விமர்சித்தாலும், அதையெல்லாம் பொருட்டாக நினைக்காமல், உடல்நிலை சரியில்லாதவருக்கு மனிதாபிமான அடிப்படையில் அமித்ஷா செய்த இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேசமயம், அமித்ஷா உதவி செய்த விவகாரம் தி.மு.க. மேலிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.