ரஷ்ய அதிபர் புடினிடம் ‘போர் தொடுப்பதற்கான காலம் இது அல்ல’ என்று, நேரடியாக தனது கருத்தை நாசுக்காகத் தெரிவித்த பிரதமர் மோடியை, அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டி இருப்பதோடு, உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியபோதே, ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, இது போருக்கான காலம் அல்ல என்று சுட்டிக்காட்டியதோடு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்க போரை நிறுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். அதன்படி, சில மணி நேரங்கள் போர் நிறுத்தப்பட்டு, இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்யா உதவி செய்தது. இதன் காரணமாகவே, 20,000 இந்திய மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில், இந்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். மோடியின் இத்தகைய செயலை உலக நாடுகள் வியந்து பாராட்டின.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடந்தது. இம்மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட உறுப்பு நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டுக்கு இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, இந்தியா – ரஷ்யா ஆகிய இரு தரப்பு நாடுகள் பற்றிய விஷயங்கள் குறித்து மோடி பேசினார். மேலும், உக்ரைன் போர் விவகாரம் பற்றி பேசிய மோடி, ‘‘இது போருக்கான காலம் அல்ல. இது குறித்து நான் உங்களிடம் ஏற்கெனவே போனிலும் பேசியிருக்கிறேன். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்’’ என்று அதிபர் புடினிடம் நாசுக்காக எடுத்துரைத்தார்.
பின்னர், பிரதமர் மோடிக்கு நிதானமாக பதிலளித்த புடின், ‘‘உக்ரைன் போரில் உங்கள் நிலையை அறிவேன். இதில் உங்கள் கவலையை நீங்கள் தொடர்ந்து தெரிவித்திருக்கிறீர்கள். கூடிய விரைவில் உக்ரைன் போரை நிறுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தையை கைவிடுவதாக அறிவித்து, ராணுவம் மூலம் தீர்வு காண விரும்புகிறார். நாங்கள் என்ன செய்ய முடியும். அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் உங்களுக்கு தெரிவித்து வருகிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார். உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூறிய போதெல்லாம் கண்டுகொள்ளாத ரஷ்ய அதிபர் புடின், பாரத பிரதமர் மோடிக்கு பொறுமையாக பதிலளித்தது அனைத்து நாட்டுத் தலைவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும் பாரத பிரதமர் மோடியை பாராட்டி இருக்கிறார்கள். மேலும், அமெரிக்க பத்திரிகைகளும் பாரத பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டி இருக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ‘‘புடினிடம் உக்ரைன் போரை கண்டித்த மோடி’’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருப்பதோடு, ‘‘இந்த அரிய அணுகுமுறை, அனைத்து தரப்பிலும் இருந்து ரஷ்ய அதிபர் புடின் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதை காட்டியது’’ என்றும் செய்தியில் தெரிவித்திருக்கிறது. மற்றொரு பிரபல நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை ‘இது போருக்கான காலம் அல்ல; புடினிடம் தெரிவித்த இந்தியத் தலைவர்’’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் உலகத் தலைவர்கள் மத்தியில் பலமிக்க தலைவராக மோடி மிளிர்கிறார் என்று பாராட்டுகள் குவிந்து வருகிறது.