ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையான நிலையில், அவர் இனி தேர்தலிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, பா.ஜ.க. சார்பில் மக்களவை சபாநாயகருக்கு புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, ஹிந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், ஹிந்துக்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், ஹிந்துக்களும், ஹிந்து அமைப்பினரும், ஆ.ராசா மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தவிர, ஆ.ராசா ஹிந்துக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனாலும், ஆ.ராசா மன்னிப்புக் கேட்க மறுத்ததோடு, ‘நான் மன்னிப்புக் கேட்க தயார். எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லுங்கள்’ என்று தெனாவெட்டாகக் கூறினார். அதோடு, மனுதர்மத்தில் இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன் என்றும் கூறினார். இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தொழில்நுட்ப அணித் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், நாடாளுமன்ற ஒழுங்குமுறை விதிகள் 233A(4)-ன் படி ஆ.ராசா மீது புகார் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு அவர் அனுப்பிய மனுவில், “அரசியல் ஆதாயத்திற்காக ஹிந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நாடாளுமன்ற ஒழுங்குமுறை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் தேர்தலில் அவர் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.