கம்பெனியை இழுத்து மூடிடுவேன்… தி.மு.க. எம்.எல்.ஏ. அராஜகம்!

கம்பெனியை இழுத்து மூடிடுவேன்… தி.மு.க. எம்.எல்.ஏ. அராஜகம்!

Share it if you like it

சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், தொழிற்சாலைக்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ளது சிங்கப்பெருமாள் கோவில். இதன் அருகே உள்ள மால்ரோசா புரத்தில் டேஜங் மொபாட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மேற்படி இடம் பூஜாகோயல் என்பவருக்குச் சொந்தமானது. இவரிடம் குத்தகை அடிப்படையில் டேஜங் மொபாட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த சூழலில், மேற்படி இடத்தின் உரிமையாளர் பூஜாகோயல், மேற்படி தனியார் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறியிருக்கிறார். ஆனால், குத்தகை காலம் முடிவடையாமல் தங்களால் வெளியேற முடியாது என்று நிறுவனத் தரப்பில் மறுப்புத் தெரிவித்து விட்டனர். எனவே, நிலத்தின் உரிமையாளரான பூஜாகோயல், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜாவிடம் விவரத்தை சொல்லி, இடத்தை காலி செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.

இதையடுத்து, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தனது படைபலத்துடன் மேற்படி நிறுவனத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு, எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, நான் யார் தெரியுமா என்கிற ரீதியில் அதிகாரிகளை மிரட்டி இருக்கிறார். ஆனால், அதிகாரிகள் மசியாததால், நான் நினைத்தால் ஒரே நாளில் இந்த நிறுவனத்தை இழுத்து மூடிவிடுவேன் என்று மிரட்டுகிறார். பதிலுக்கு, நீங்கள் பேசுவது அனைத்தும் இந்த வீடியோவில் பதிவாகிக் கொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம், தலைமைச் செயலகத்துக்குச் சென்று போட்டுக் காட்டுகிறேன் என்று நிறுவன அதிகாரி கூறுகிறார். இதைக் கேட்டு எம்.எல்.ஏ. ராஜா சற்றே பம்மினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஆவேசமடைந்தவர் போல் அந்த அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கை கால்களை முறித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவான நிலையில், அதை அப்படியே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர் மேற்படி நிறுவனத்தின் அதிகாரிகள். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டது. இந்த வீடியோ கட்சி மேலிடம் வரை செல்லவே, தலைமையின் சம்மதத்தின் பேரில் எம்.எல்.ஏ. ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நிறுவன அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த ஆர்.கே.ஷர்மா என்பவர், 230 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்து விட்டார். அவர் மீதான ஊழல் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், நிலத்தின் உரிமையாளர் பூஜாகோயல், திடீரென இடத்தை காலி செய்யுமாறு கூறினார். இது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட, தொலைபேசியில் தொடர்புகொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, இடத்தை காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்தார். எங்களது குத்தகை காலம் முடியும்வரை இடத்தை காலி செய்ய முடியாது என்று கூறிவிட்டோம். இந்த சூழலில், நேற்று திடீரென நிறுவனத்துக்குள் நுழைந்து எங்களை மிரட்டினார். இவை அனைத்தும் எங்கள் நிறுவனத்திலுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி விட்டது. இதை அடிப்படையாக வைத்து தலைமைச் செயலாளரிடம் இணையதளம் மூலம் புகார் அளித்தோம்” என்றார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பொதுவெளியில் நிறுவன அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கம்பெனியை இழுத்து மூடிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it