தமிழகத்தில் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, ஈரோட்டல் 4 பேரையும், கோவையில் 3 பேரையும் என 7 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் மீது, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத பயிற்சி அளித்தல், ஹவாலா பணப்பரிமாற்றம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, நாடு முழுவதும் மேற்கண்ட அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை அதிரடி சோதனை நடத்தின. 15 மாநிலங்களில் 93 இடங்களில் நடந்த இந்த மாஸ் ரெய்டில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 120 கோடி ரூபாய் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. ரெய்டை கண்டித்து பி.எஃப்.ஐ. அமைப்பினர் நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தினர். மேலும், இந்த ரெய்டுக்குக் காரணம் மத்திய பா.ஜ.க. அரசுதான் என்று கருதி, தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் குண்டுகளை வீசினர். அந்த வகையில், ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இதிபல், கருங்கல்பாளையம் ஜெகன் வீதியைச் சேர்ந்த முகமது ரபீக்கின் மகன் சதாம்உசேன், பி.பி. அக்ரஹாரம் கைக்கோளர் வீதியைச் சேர்ந்த முகமது இலியாசின் மகன் கலில் ரகுமான், இந்திரா நகரைச் சேர்ந்த அமானுல்லாவின் மகன் ஜாபர் சாதிக், இவரது தம்பி ஆசிக் அலி ஆகியோர் கடைக்கு தீவைக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களில், சதாம் உசேன் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகி என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல, கோவையில் ஹிந்து முன்னணி நிர்வாகிகளின் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் முகமது ரபீக், மாலிக், ரமீஸ் ராஜா ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.