என்.ஐ.ஏ. அமைப்பினர் இன்று மீண்டும் நடத்திய ரெய்டில், 200-க்கும் மேற்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பினர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல், முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத பயிற்சி அளித்தல், நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுதல், அல்கொய்தா, அல் உம்மா, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கும். மேலும், டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஹனுமன் ஜெயந்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகை ஊர்வலங்களின்போது வன்முறையில் ஈடுபட்டது, கர்நாடகவில் ஹிஜாப் பிரச்னையில் பின்னணியில் இருந்து இயக்கி விட்டது போன்ற குற்றச்சாட்டுகளும் பி.எஃப்.ஐ. அமைப்பினர் மீது இருக்கிறது.
எனவே, பி.எஃப்.ஐ. அமைப்பினரின் நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக கண்காணித்து வந்தது தேசியப புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு. இதைத் தொடர்ந்து, கடந்த 21-ம் தேதி என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போலீஸ் என பி.எஃப்.ஐ. அமைப்பினரை குறிவைத்து மாஸ் ரெய்டில் இறங்கியது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் நடந்த இந்த ரெய்டில் வாக்கி டாக்கி, வயர்லெஸ் போன்கள், முக்கிய ஆவணங்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதோடு, 120 கோடி ரூபாய்க்கான ஹவாலா பணப்பரிவர்த்தனையும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, 105 பேரை என்.ஐ.ஏ. கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதும், பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி நடந்ததும் அம்பலமானது.
ஆகவே, இரண்டாம் கட்டமாக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, அஸ்ஸாம், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் இன்றும் சோதனையில் ஈடுபட்டிருக்கிறது தேசிய புலானய்வு முகமை. இந்த சோதனையில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அஸ்ஸாமில் 25 பேரும், குஜராத்தில் 10 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 21 பேரும், கர்நாடகாவில் 40 பேரும், மகாராஷ்டிராவில் 40 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், கடந்த ரெய்டின் போது பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், இந்த முறை போராட்டம் நடத்தாமல் இருக்க டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நவம்பர் 11-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.