தி.மு.க. தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு: கவுன்சிலர்கள் கண்ணைக் கட்டி போராட்டம்!

தி.மு.க. தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு: கவுன்சிலர்கள் கண்ணைக் கட்டி போராட்டம்!

Share it if you like it

தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவரை கண்டித்து, அக்கட்சியின் கவுன்சிலர்களே கருப்பு ரிப்பனில் கண்ணைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தது ஜெகதளா பேரூராட்சி. இதன் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த பங்கஜம். துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்சங்கர் இருந்து வருகிறார். தலைவரும், துணைத் தலைவரும் சிண்டிகேட் அமைத்து பேரூராட்சியில் ஏராளமான ஊழல் மற்றும் முறைகேடுகளை செய்து வருகிறார்களாம். தவிர, பினாமி தலைவராக ஒருவர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், தலைவர், துணைத் தலைவர், பினாமி தலைவர் ஆகியோரை கண்டித்து தி.மு.க.வைச் சேர்ந்த 5-வது வார்டு கவுன்சலர் திலீப், 2 பெண் கவுன்சிலர்கள் உட்பட சில கவுன்சிலர்கள், கண்ணில் கருப்பு ரிப்பனை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து கவுன்சிலர் திலீப் கூறுகையில், “சாதாரணமாக, வார்டில் பைப் உடைந்து விட்டது என்று பேரூராட்சியில் சொன்னால் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் ஆக்கிவிடுகிறார்கள். டியூப் லைட் எரியவில்லை என்று சொன்னால் 15 நாட்களுக்கும் மேலாக்கி விடுகிறார்கள். தவிர, பேரூராட்சியில் என்ன தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்பதே கவுன்சிலர்களுக்கு தெரியாது. அதேபோல, மாத வரவு செலவு கணக்குகளையும் காட்டுவதில்லை. இதை கேட்டால் அவ்வளவுதான், வார்டில் என்ன பிரச்னையாக இருந்தாலும் பேரூராட்சியில் இருந்து ஆட்கள் வரமாட்டார்கள். பிளம்பர் வரமாட்டார், எலெக்ட்ரீஷியன் வரமாட்டார். எந்த வேலையும் நடக்காது. அந்தளவுக்கு பேரூராட்சியில் அராஜகம் நடக்கிறது.

தலைவரும், துணைத் தலைவரும் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ஊழல் செய்கிறார்கள். பேரூராட்சி லைட்கள் வாங்குவது முதல் சாலை போடுவது வரை எல்லாவற்றிலும் கமிஷன்தான். யாரும் தட்டிக் கேட்க முடியாது. போதாக்குறைக்கு பேரூராட்சியில் பினாமி தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர் சொல்வதுதான் சட்டம். அவரது அதிகாரம்தான் தூள் பறக்கிறது. பேரூராட்சியில் என்ன தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்பதையே, இந்த முறைதான் கேட்டு வாங்கிப் பார்த்துத் தெரிந்து கொண்டோம். கவுன்சிலர்களின் நிலை அவ்வளவு கேவலமாக இருக்கிறது” என்று குமுறினார். இதுகுறித்து விசாரித்தபோது, நீலகிரியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தலைவராக இருக்கும் பல பேரூராட்சிகளில் இதேநிலைதான் நீடிப்பதாகத் தெரியவருகிறது.


Share it if you like it