தமிழ்நாடே ஓசில போனாலும் நான் போக மாட்டேன். இந்தா பிடி காசை, டிக்கெட்டை கொடு என்று மூதாட்டி ஒருவர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பாகி வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். அதேசமயம், இந்த இலவச பயணத்தால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அதாவது, இலவச பேருந்தில் ஏறும் பெண்களை கண்டக்டர் முதல் பயணிகள் வரை யாரும் மதிப்பதில்லை. அதேபோல, பெண்கள் இருக்கைகளில் அமர அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே இருக்கையில் அமர்ந்திருந்தாலும், ஓசி பயணம்தானே எழுந்து நில்லுங்கள் என்று கண்டக்டரும், சக பயணிகளும் கூறுவது வழக்கமாகி விட்டது.
மேலும், பஸ் ஸ்டாப்பில் பெண்கள் மட்டுமே நிற்பதை பார்த்தால் பஸ்ஸை நிறுத்துவதில்லை. ஆட்கள் இறங்க வேண்டி இருந்தால் பஸ் ஸ்டாப்பை விட்டு சற்று தள்ளி நிறுத்துகிறார்கள். இதனால், பெண்கள் ஓடிச்சென்று ஏறும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, ஓசில தானே பஸ்ல வர்றீங்க என்று மிகவும் கேவலமாகப் பேசினார். இந்த சம்பவம் பெண்கள் மத்தியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நாங்களா இலவசம் பயணம் கேட்டோம் என்று எதிர்குரல் கொடுக்கத் தொடங்கினர். மேலும், இலவச பயணத்தால் தாங்கள் சந்திக்கும் அவமானங்களையும் அம்பலப்படுத்தினர்.
இந்த நிலையில்தான், தமிழ்நாடே ஓசில போனாலும் நான் போகமாட்டேன் என்று மூதாட்டி வைராக்கியப் பேசியதோடு, காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் செய்த சம்பவம் அரங்கேறி, தி.மு.க. அரசின் திட்டத்தை சில்லு சில்லாக நொறுக்கி இருக்கிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் ஒரு அரசுப் பேருந்தில் வயதான மூதாட்டி ஒருவர் ஏறுகிறார். அந்தப் பேருந்து மகளிர் இலவசமாக பயணிக்கும் அரசுப் பேருந்து.
ஆனால், பஸ்ஸில் ஏறிய அந்த மூதாட்டியோ, இலவச பயணம் என்று தெரிந்தும் கண்டக்டரிடம் காசை கொடுத்து டிக்கெட் கொடுக்கும்படி கேட்கிறார். அதற்கு காசை வாங்க மறுத்த கண்டக்டர், இது பெண்களுக்கு இலவச பேருந்து, உங்களுக்கும் இலவசம்தான் என்கிறார். உடனே அந்த மூதாட்டி, நான் ஓசில வரமாட்டேன். காச வாங்கிக்கிட்டு டிக்கெட் கொடு என்று கேட்கிறார். மேலும், காசை வாங்காவிட்டால் எனக்கு டிக்கெட்டும் வேணாம் என்று கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதற்கு கண்டக்டரோ, இந்த பேருந்தில் பயணிக்கும் எல்லா பெண்களும் காசு கொடுக்காமல்தான் இலவசமாகப் பயணிக்கிறார்கள் என்று கூறுகிறார். பதிலுக்கு மூதாட்டியோ, தமிழ்நாடே ஓசில போனாலும், நான் போகமாட்டேன் என்கிறார்.
இதையடுத்து, அந்த மூதாட்டியை சமாதானப்படுத்த முயல்கிறார் அந்த கண்டக்டர். ஆனாலும், அந்தப் பாட்டி சமாதானமடையவில்லை. இலவசம்னு சொல்லிவிட்டு ஓசிலதான போறீங்கன்னு கேவலமா சொல்றாங்க. அதனால இந்தா காசு. டிக்கெட்டை கொடு என்று மீண்டும் மீண்டும் அடம்பிடிக்கிறார். இதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மூதாட்டியிடம் காசை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை கொடுத்துவிட்டு, மீதி சில்லரையும் கொடுத்திருக்கிறார் கண்டக்டர். இந்த மொத்த சம்பவத்தையும், பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர் விடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி, அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதைப் பார்த்த பலரும், தி.மு.க.வினர்தான் எதற்கெடுத்தாலும் சுயமரியாதை பற்றி பேசுகிறார்கள். ஆனால், பெண்களின் சுயமரியாதையை கேலி செய்யும் விதமாக பேசிவருகின்றனர். இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த மூதாட்டியில் செயல் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும், வெறும் 10 ரூபாய் கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலையிலா நாங்கள் இருக்கிறோம். கேவலம் இந்த 10 ரூபாய்க்கு நாங்கள் பட்ட அவமானம் போதும். இனி பெண்கள் அனைவரும் காசு கொடுத்துத்தான் போகப்போகிறோம் என்று சபதம் எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.