பஞ்சாப்பில் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதி மறுக்கப்பட்டதால், கர்ப்பிணி ஒருவர் வராண்டாவிலேயே பிரசவித்த அவலம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாங்கிலால். கூலித் தொழிலாளியான இவர், பிழைப்புத் தேடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டுக்கு வந்தார். அங்கு பிப்லி மொஹாலா பகுதியில் குடும்பத்துடன் குடியேறியவர், அப்பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், இவரது மனைவி 3-வதாக கர்ப்பமடைந்தார். இந்த சூழலில், நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் துடிக்கவே, 108 ஆம்புலன்ஸ் மூலம் பதான்கோட் சிவில் மருத்துவமனைக்கு இரவு 11.30 மணியளவில் அழைத்து வந்தார். ஆனால், மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் அப்பெண்ணை பிரசவ வார்டில் அனுமதிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அமிர்தசரஸிலுள்ள தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், தனது மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதால், இங்கேயே பிரசவம் பார்க்கும்படி மருத்துவமனை ஊழியர்களிடம் மன்றாடி இருக்கிறார். அப்படியும் ஊழியர்களின் மனது இறங்கவில்லை. அதோடு, பிரசவ வார்டையும் இழுத்து பூட்டி விட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கர்ப்பிணி பெண், மருத்துவமனையில் வராண்டாவிலேயே வலியால் துடித்தப்படி படுத்துக் கிடந்திருக்கிறார். இதனிடையே, அப்பெண்ணுக்கு வராண்டாவிலேயே குழந்தையும் பிறந்திருக்கிறது. அப்பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், வராண்டாவிலேயே படுத்துக் கிடந்திருக்கிறார். இதைக்கண்ட அங்கிருந்த நோயாளி ஒருவர், இக்காட்சிகளை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இதையடுத்து, அவசர அவசரமாக வந்த மருத்துவமனை ஊழியர்கள், தாயையும், சேயையும் பிரசவ வார்டுக்கு தூக்கிச் சென்றனர்.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் ஜாங்கி லால், “எனது மனைவி பிரசவ வலியால் துடித்ததால், அவளை பிரசவத்திற்காக பதான்கோட் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், என் மனைவியை பிரசவ வார்டில் அனுமதிக்காமல், மருத்துவமனை ஊழியர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, பிரசவ அறையின் கதவுகளையும் மூடிவிட்டனர். நானும், ஆம்புலன்ஸ் டிரைவரும் எவ்வளவோ மன்றாடியும் அனுமதிக்க மறுத்து விட்டார்கள். எனது மனைவியை அமிர்தசரஸுக்கு அழைத்துச் செல்லும்படி சொன்னார்கள். இரவில் என் மனைவியை அமிர்தசரஸ் நகருக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லை என்பதால், மருத்துவமனை ஊழியர்களின் கருணையை நம்பியிருந்தேன். ஆனால், எங்களுக்கு ஒரு படுக்கைகூட வழங்க எந்த ஊழியரும் முன்வரவில்லை.
மேலும், மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவில்லை என்றால், காவல்துறையை அழைப்பதாக ஊழியர்கள் மிரட்டினார்கள். மருத்துவமனை ஊழியர்களின் மனிதாபிமானமற்ற நடத்தையால், நான் எனது மனைவி மற்றும் குழந்தையின் உயிரை இழந்திருக்கலாம். ஆனால், தெய்வாதீனமாக எந்த ஊழியர்களின் ஆதரவும் இல்லாமல், எனது மனைவி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இது ஒரு அதிசயம் போன்றது. இதன் பிறகும், புதிதாக பிறந்த குழந்தை மற்றும் அவரது தாயை பராமரிக்க எந்த ஊழியர்களும் முன்வரவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் வந்து குழந்தையை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அதிகாலை 3:30 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு, பஞ்சாப் மாநிலத்தில் நடந்துவரும் கெஜ்ரிவால் கட்சியின் அவலத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதுதான் உலகத்தரமான மருத்துவச் சிகிச்சையா என்றும், இதற்காகத்தான் ஆம் ஆத்மி கட்சியை கடவுள் படைத்தாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி கடவுள் அருளியது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.