‘தங்கம்’ ஸ்வப்னாவின் சுயசரிதை: கேரள அரசியலில் வீசப்போகும் புயல்!

‘தங்கம்’ ஸ்வப்னாவின் சுயசரிதை: கேரள அரசியலில் வீசப்போகும் புயல்!

Share it if you like it

தங்கக் கடத்தல் வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஸ்வப்னா தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி இருக்கிறார். இதில், முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மோசடியில் ஈடுபட்டது, தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு பகீர் தகவல்கள் இடம்பெற்றிருக்கிறதாம். இதனால், இப்புத்தகம் கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்கிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஐக்கிய அரபு நாடுகளின் (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு 2020-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், தலைமைச் செயலகத்தில் ஐ.டி. துறையின் ஸ்பேஸ் பார்க்கில் அதிகாரியாக தற்காலிக பணியில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 98 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், ‘அஸ்வத்தாமாவு வெறும் ஒரு ஆனையானு’ என்ற தலைப்பில் 176 பக்கம் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அப்புத்தகத்தில், “தங்கக் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிற ரீதியில் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், ஓராண்டு 4 மாதம் சிறையில் இருந்துவிட்டு கடந்தாண்டு நவம்பர் 5-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ். இவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை போலவே தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி இருக்கிறார். ‘சதியுடே பத்ம வியூகம்’ என்ற அப்புத்தகத்தில், “ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், சென்னையில் ஒரு கோயிலில் வைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். அப்போது, எனது நெற்றியில் குங்குமம் வைத்து ‘உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்’ என்று சொன்னார். நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன். அதேபோல, கேரளா முன்னாள் அமைச்சர் ஒருவர் எனக்கு பலமுறை செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். அவர், என்னை ஹோட்டலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன. அதை விசாரணை ஏஜென்சிகளிடமும் ஒப்படைத்திருக்கிறேன்.

மேலும், `பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவ்வழக்கில் இருந்து நாம் காப்பாற்றப்படுவோம்’ என்று கூறினார்கள். அதனால்தான், `விசாரணை அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி மிரட்டுகிறார்கள்’ எனவும், `அரசுக்கோ, முதல்வருக்கோ தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இல்லை’ எனவும் சிறையில் இருந்து ஆடியோ வெளியிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறாராம். குறிப்பாக, முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மோசடியில் ஈடுபட்டது, முன்னாள் அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நளினி நட்டோ உள்ளிட்ட பலருக்கு எதிரான தகவல்கள் பற்றியும் இப்புத்தகத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆகவே, நாளை வெளியாகவிருக்கும் ஸ்வப்னாவின் சுயசரிதை புத்தகம், கேரள அரசியலில் புயலைக் கிளப்பும் என்கிறார்கள்.


Share it if you like it