பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயக்குனர் சஜித் கானுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. ‘மீ டூ’ புகாரில் சிக்கிய அவரை உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து நீக்க டெல்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ரியாலிட்டி ஷோவான இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தி மொழியில்தான் நடத்தப்பட்டது. இதன் பிறகுதான் பிற மொழிகளில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. தமிழில் 6-வது சீசன் தொடங்கி இருக்கும் நிலையில், ஹிந்தியில் 16-வது சீசன் நடந்து வருகிறது. ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் இதுதான்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பரபரப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது, ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனில், ஹிந்தி திரைப்பட இயக்குனர் சஜித் கான் என்பவரும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவர்தான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. சஜித் கானை உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
காரணம், இயக்குனர் சஜித் கான், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். அவர் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே ‘மீ டூ’ புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இப்படியொரு கேவலமான மனநிலை படைத்த ஒருவருக்கு எப்படி பிக்பாஸில் இடம்கொடுக்கப்பட்டது என்று ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானை வெளியேற்றக் கோரி புகார் அளித்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவுக் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.