ஆர்.எஸ்.எஸ். தூய்மைப் பணியை தி.மு.க. தலைவரின் கணவர் தடுத்த விவகாரம் பரங்கிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அவ்வப்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று மாநிலம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் பகுதியிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையாக மனு கொடுத்து அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து, சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். குப்பைகளை அள்ளுவதற்கு ஏதுவாக பேரூராட்சி சார்பில் குப்பை அள்ளும் வாகனம் அனுப்பப்பட்டிருந்தது. .அப்போது, நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த குப்பைகளை அகற்றும்படி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதன் பேரில், குப்பைகளை அள்ளிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், அக்குப்பைகளை பேரூராட்சி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பேரூராட்சி தலைவரின் கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சங்கர், குப்பைகளை பேரூராட்சி வண்டியில் ஏற்றக்கூடாது என்று சொல்லி, டிரைவரிடம் வண்டியை எடுக்கச் சொன்னார். இதனால், பேரூராட்சி ஊழியர் வண்டியை எடுத்துச் சென்றார். வண்டியை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கேட்டதற்கு, உங்கள் சொந்த வண்டியை வைத்து அள்ளுங்கள் என்று பேரூராட்சி தலைவரின் கணவர் சங்கர் கூறினார். எனவே, இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தங்களது சொந்த வண்டியில் குப்பைகளை ஏற்றி அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் நல்ல காரியம் செய்வதைக்கூட தி.மு.க.வினர் தடுக்கிறார்களே என்று வசைபாடி வருகின்றனர். பரங்கிப்பேட்டை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தூய்மைப் பணி உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளில் ஈடுபடும் போதெல்லாம் இதுபோன்று தகராறு செய்வதை தி.மு.க.வினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.