பசிபிக் கடலில் பறக்கும் தட்டுகள் பறந்ததாக அமெரிக்க விமானிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பூமிக்கு வெகு அருகில் பறக்கும் தட்டுகள் பறந்ததாகவும், இதை சிலர் பார்த்ததாகவும் நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது, வேறு கிரகங்களில் ஏலியன்கள் வசிப்பதாகவும், இவைதான் பறக்கும் தட்டுக்கள் மூலம் பூமியை நோட்டம் விடுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பூமி தவிர்த்த பிற கிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா என்கிற ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் நடந்து வருகின்றன. தற்போது, தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டிருப்பதால், ஆய்வில் முக்கிய நகர்வுகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. மேலும், ஏலியன்களை காண்பதற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான், பசிபிக் கடல் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் தென்பட்டதாக அமெரிக்க விமானிகள் பலர் தெரிவித்து பரபரப்பை கூட்டி இருக்கிறார்கள். அதாவது, வேற்றுகிரகவாசிகள் மற்றும் வான் பகுதியில் பறக்கும் அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் உளவுத்துறை ஏஜென்ட் பென் ஹான்சன் தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறார். இதற்காக, பல விமானிகளை வேலைக்கு எடுத்து, அவர்கள் மூலம் பறக்கும் தட்டுக்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இவரது விமானிகள்தான் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியும், செப்டெம்பர் 23-ம் தேதியும் பசிபிக் கடல் பகுதியில் பறக்கும் தட்டுக்களை பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல், மார்க் ஹல்சே என்கிற விமானி ஆகஸ்ட் 18-ம் தேதி சுமார் 5,000 முதல் 10,000 அடி உயரத்தில் 7 பறக்கும் தட்டுக்கள் பறந்ததை பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதன் இயக்கங்களை பதிவு செய்து வைத்திருக்கும் ஆராய்ச்சியாளர் பென் ஹான்சன், தனக்குக் கிடைத்த தகவல்களை உளவுத்துறைக்கு பகிர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதுதான் தற்போது ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாத பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.