கோவையில் இன்று அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானார். வெடித்துச் சிதறிய காரில் பால்ரஸ் குண்டுகளும், ஆணிகளும் அதிகளவில் இருந்ததால், இது தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடந்த சதியா என்று போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை நகரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த மாருதி ஆல்டோ கார், இன்று அதிகாலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், காருக்குள் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதேசமயம், வெடித்துச் சிதறிய காருக்குள் ஏராளமான பால்ரஸ் குண்டுகளும், ஆணிகளும் அதிகமாக தெறித்துக் கிடந்தன. இதை தடய அறிவியல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் இச்சம்பவம் சதித் திட்டமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அதாவது, சமீபத்தில்தான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த ஆத்திரத்தை வெளிபடுத்தும் வகையில், இச்சம்பவம் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடந்த சதியாக இருக்கலாம் என்று உளவுத்துறையினரும் சந்தேகப்படுகின்றனர். வெடித்துச் சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என்பதும், 4 பேருக்கு கைமாறி இருப்பதும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது மேலும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.