நான் பயந்தவனாக இருந்தால் வங்கு தோண்டி வங்கு எலியைப் போல் ஒழிந்து கொண்டிருப்பேன். தொட்டுப்பாருங்க பார்த்துக்கலாம் என்ற தைரியத்தில்தான் வந்திருக்கிறேன் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சவால் விடுத்திருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், பா.ஜ.க. தலைவரான பிறகு, ஏராளமான இளைஞர்களும், மாற்றுக் கட்சியினரும் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி வருகின்றனர். இதனால், மாற்றுக் கட்சியினர் அண்ணாமலை மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாக, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அண்ணாமலையை வசைபாடி வருகின்றனர். மேலும், தி.மு.க. அரசில் நடக்கும் ஊழல், முறைகேடுகள் உள்ளிட்டவற்றை பொதுவெளியில் அம்பலப்படுத்தி வரும் அண்ணாமலை, கொலை, கொள்ளை, ரவுடியிசம் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி வருகிறார். இது ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியாக இருப்பதால், அண்ணாமலை மீது வழக்குப் போடுவதாக மிரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோவையில் கார் வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இது தீபாவளியை சீர்குலைக்க நடந்த சதி என்று கூறப்படும் நிலையில், இந்த கார் வெடிப்பு சம்பவத்தையும், அதன் பின்னணி குறித்தும் அண்ணாமலை பல்வேறு தகவல்களை வெளியிட்டார். இது ஆளும் தரப்புக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியது. ஆகவே, அண்ணாமலை மீது பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இந்த சூழலில்தான், தனியார் செய்திச் சேனல் ஒன்று அண்ணாமலையில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அப்போது, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மாநிலத் தலைவராக இருப்பதால், உங்களை ஒன்றும் செய்ய முடியாது என்கிற தைரியத்தில் நீங்கள் இப்படியெல்லாம் பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அண்ணாமலை,
என்னை ஏதாவது பண்ணுவாங்கன்னு நினைத்திருந்தால் வங்கு தோண்டி அதற்குள் வங்கு எலியைப் போல் போய் பதுங்கிக் கொண்டிருப்பேன். 37 வயதில் இதுபோல உங்கள் முன்பு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க மாட்டேன். தொட்டுப் பாருங்க பார்த்துக்கலாம்னுதான் வந்திருக்கிறேன். எனக்கு பின்னாடி ஒன்றும் கேடயமோ, பண பலமோ, படை பலமோ இல்லை. ஒரு நாள் இல்ல, ஒருநாள் தி.மு.க. என்னை தொடத்தான் போகுது. தொட்டுப்பாருங்க பார்த்துக்கலாம்” என்று சவால் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். அண்ணாமலையின் இந்த பேச்சு பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் வரவேற்பையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.