கன்னியாகுமரியில் தி.மு.க. பிரமுகர் ஒருவர், உடல்நலம் சரியில்லாத மீனவர் ஒருவரை தாக்கியதோடு, அவரது மனைவியையும் அவதூறாகப் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் சத்தமே இல்லாமல் மதமாற்றமும் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல, தி.மு.க.வினரின் அராஜகங்களும் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது எதிராளிகளை எல்லாம் வஞ்சம் தீர்த்து வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தி.மு.க.வினர் கமிஷனில் திளைப்பதோடு, அரசு ஊழியர்களை மிகவும் தரக்குறைவாக நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல, போலீஸாரையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
அந்த வகையில், தன்னிடம் கடன் வாங்கிய மீனவர் ஒருவரை தாக்கியதோடு, அவரது மனைவியையும் அவதூறகப் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் தி.மு.க. பிரமுகர் ஒருவர். கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் இன்பம். தி.மு.க. பிரமுகரான இவர், விசைப்படகு உரிமையாளர். இவரிடம் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மீனவர் சகாயவினோ என்பவர், டிரைவராகப் பணிபுரிந்து வந்தார். இவர், அவசரத் தேவைக்காக இன்பத்திடம், பணம் கடன் வாங்கி இருக்கிறார். குறிப்பிட்ட தேதியில் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். அதேபோல, வேலைக்கும் செல்லவில்லையாம். காரணம், சகாயவினோவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்த நிலையில், அடியாட்களுடன் மீனவர் சகாயவினோ வீட்டுக்குச் சென்றிருக்கிறார் இன்பம். அங்கு மீனவர் சகாயவினோவை கன்னத்தில் அறைந்து தாக்கிய அவர், சகாயவினோவின் மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருக்கிறார். இதில், இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க. பிரமுகர் ஒருவர், மீனவரை தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்த பலரும், தி.மு.க.வினரின் அடாவடிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.