கோவை கார் வெடிப்பு குற்றவாளி ஜமேஷா முபின், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியா இருக்கலாமோ என்கிற சந்தேகம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு எழுந்திருக்கிறது.
கோவை நகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த மாதம் 23-ம் தேதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. முதலில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், காருக்குள் ஆணிகள், பால்ரஸ், கோழி குண்டுகள் ஆகியவை சிதறிக்கிடந்ததால், இது ஒரு பயங்கரவாத சதி என்கிற முடிவுக்கு போலீஸார் வந்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், காருடன் கருகிய ஜமேஷா முபின் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிபொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியது தெரியவந்தது. மேலும், அவரது எதிர் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது, முபினுடன் 4 பேர் சேர்ந்து, அவரது வீட்டிலிருந்து மர்ம பொருளை எடுத்துச் சென்று காரில் ஏற்றுவதும் தெரியவந்தது.
இதையடுத்து, இது பக்காவாக திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முபினுக்கு உடந்தையாக இருந்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. காரணம், முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு சிலேட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியின் வடிவம் வரையப்பட்டிருந்தது.
மேலும், ஜிகாத் குறித்து முபின் தனது கைப்பட எழுதிய சில பேப்பர்களும் அதிகாரிகளிடம் சிக்கி இருக்கிறது. அந்த பேப்பர்களில் எந்த வயதில் யார் யார் ஜிகாத் செய்யலாம் என்று முபின் எழுதி இருக்கிறான். அதில், குழந்தைகளும், முதியவர்களும் ஜிகாத்தில் ஈடுபடக் கூடாது. இளைஞர்கள்தான் ஈடுபட வேண்டும் என்று எழுதி இருக்கிறான். மேலும், அரபு மொழியில் எழுதப்பட்ட சில தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே, இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரிடமும், முபினின் குடும்பத்தினரிடமும் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.