தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கித் தர மறுத்ததால் நகராட்சி அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்திலோ பாலியல் வழக்கில் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி.யை கான்ஸ்டபிளாக பதவிக் குறைப்பு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் அறிவுடைநம்பி. இவர், நேர்மையான அதிகாரி என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், புதிதாகப் பதவியேற்ற தி.மு.க.வைச் சேர்ந்த நகராட்சி தலைவர், நகரச் செயலாளர் மற்றும் நகராட்சி உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால், அறிவுடைநம்பியோ லஞ்சம் வாங்கிக் கொடுக்கவில்லையாம். இந்த சூழலில், நகராட்சிக்குச் சொந்தமான குடியிருப்புகளில் ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர்களும், தற்காலிக பணியாளர்களும் குடியிருந்து வந்தனர். இவர்கள் நிரந்தரமாக அங்கேயே குடியிருக்க லஞ்சம் வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார்கள். இதற்கும், அறிவுடைநம்பி மறுத்துவிடவே, மேற்கண்ட வீடுகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். பின்னர், இதையே சாக்காக வைத்து அவரை நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்கு பணியிட மாறுதல் செய்துவிட்டனர். இதனால், மனமுடைந்த அவர், தி.மு.க. அரசுக்கு சாபம் விட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, அவரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், லஞ்சம் கேட்ட யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழகத்தின் நிலை இப்படி இருக்க, உத்தரப் பிரதேசத்திலோ லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. ஒருவர் கான்ஸ்டபிளாக தகுதிக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறார். அதாவது, உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் உள்ளிட்ட கும்பல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தார். அப்போது, மாவட்ட டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா, இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வந்தார். எனவே, குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பெண் புகாரி கூறினார்.
இதையடுத்து, டி.எஸ்.பி. வித்யா கிஷோர் சர்மா பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்துக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து, வித்யா கிஷோர் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில், வித்யா கிஷோர் சர்மா குற்றவாளிகளிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கியது வீடியோ ஆதாரத்துடன் நிரூபணமானது. இதன் தொடர்ச்சியாக, டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மாவை, கான்ஸ்டபிளாக பதவி குறைப்பு செய்யும்படியும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யும்படியும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், வித்யா கிஷோர் சர்மா முதன் முதலாக போலீஸில் வேலைக்குச் சேர்ந்தது கான்ஸ்டபிளாகத்தான். இந்த விவகாரம் உ.பி. போலீஸார் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.