பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பட்டப்பகலில் சிவசேனா தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சீக்கியர்கள் அதிகமாக வசிக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையும், இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தையும் இணைத்து தனி நாடு கேட்டு போராடி வருகின்றனர். இதற்காக, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தூண்டி விட்டு வருகின்றனர். அந்த வகையில், விவசாய சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை பெரிய அளவில் தூண்டி விட்டு, தலைநகர் டெல்லியில் போராட வைத்தது இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள்தான். இது ஒருபுறம் இருக்க, பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரபல பஞ்சாபி பாடகருமான சித்து மூஸ்வாலா, பயங்கரவாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்தான் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், பஞ்சாப்பில் ஹிந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்செயலில் ஈடுபட்டதும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கோயிலின் சிலைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டன. இச்சிலைகள் கோயில் வளாகத்துக்கு வெளியே உள்ள குப்பையில் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டித்து, பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா என்கிற பெயரில் ஹிந்து அமைப்பை நடத்தி வரும் சுதிர் சூரி என்பவர் தலைமையில், அந்த அமைப்பினர் அமிர்தசரஸ் கோயிலுக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்போராட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென அடையாளம் தெரியாத நபர்கள், இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சிவசேனா தலைவர் சுதிர் சூரியை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் 2 குண்டுகள் சுதிர் சூரி மீது பாய்ந்தது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சுதிர் சூரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் அமிர்தசரஸில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒரு நபரை போலீஸார் கைது செய்து, அவனிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவனது பெயர் சந்தீப் சிங் என்பது தெரியவந்தது. இவன் ஒரு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன். இதனிடையே, பஞ்சாப் திப்பா சாலை கிரேவால் காலனியில் உள்ள பஞ்சாப் சிவசேனா தலைவர் அஸ்வனி சோப்ராவின் வீட்டின் அருகே சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் கோபால் சாவ்லா, சிவசேனா தலைவர் சுதிர் சூரி கொல்லப்பட்டதை கொண்டாடி இருக்கிறான். மேலும், இதேபோல ஹிந்து அமைப்புத் தலைவர்கள் பலரையும் கொலை செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறான். குறிப்பாக, நிஷாந்த ஷர்மா, அமித் அரோரா உள்ளிட்டோரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறான். இதைத் தொடர்ந்து, ஹிந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பஞ்சாப் போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.