கோவையில் கண்காணிப்பு வளையத்தில் 900 பேர்!

கோவையில் கண்காணிப்பு வளையத்தில் 900 பேர்!

Share it if you like it

கார் வெடிப்பு சதிச் செயலைத் தொடர்ந்து, கோவையில் மட்டும் 900 பேர் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ம் தேதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில், ஜமேஷா முபின் என்பவன் உடல் கருகி பலியானான். முதலில் இது ஒரு சிலிண்டர் வெடிப்பு என்று கருதப்பட்ட நிலையில், காருக்குள் சிதறிக் கிடந்த ஆணிகள் மற்றும் பால்ரஸ், கோழி குண்டுகள் இது ஒரு சதிச் செயல் என்பதை காட்டிக் கொடுத்தது. இதன் பிறகு கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகள், ஜமேஷா முபின் வீட்டில் கிடைத்த வெடிபொருட்கள் ஆகியவை இது ஒரு திட்டமிட்ட சதி என்பதை உறுதிப்படுத்தின. இதையடுத்து, ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு மாற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, கோவை நகர போலீஸார் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த 18 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். மேலும், பி.எஃப்.ஐ. உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்கள், அடிப்படைவாத அமைப்புகளில் தீவிரமாக இயங்குபவர்கள், இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என 900 பேரின் பட்டியலை போலீஸார் தயாரித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். இப்பட்டியலில் உள்ள நபர்களிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தவும், வீடுகளில் சோதனை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த பட்டியல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, கார் வெடிப்பு சதிச் செயல் சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆகவே, இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், கருத்துகளை பதிவிடுவதை தடுக்கவும், சைபர் கிரைம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, சமூக வலைத்தளங்களில் மத அடிப்படைவாத கருத்துகளை பதிவிடுபவர்களையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அதேபோல, கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் 900 பேரிடமும் விசாரணை நடத்த ஏதுவாக போலீஸார் 25 கேள்விகளை தயார் செய்திருக்கிறார்கள். இதில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், வேலை, மத ஈடுபாடு, அடிப்படைவாத கொள்கை, சமூக வலைத்தள கணக்கு, பதிவிட்டுள்ள கருத்துகள், வங்கி கணக்கு விவரம் உள்பட பல்வேறு கேள்விகள் இடம் பெற்றிருக்கிறதாம். ஆக மொத்தத்தில் கோவை கார் வெடிப்பு தமிழக போலீஸாருக்கு மிகப்பெரும் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.


Share it if you like it