சொந்தக் கட்சி நிர்வாகியை தாக்கிய தி.முக.வினர் 20 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தி.மு.க.வை பொறுத்தவரை உட்கட்சி பூசல் என்பது சகஜமாகி விட்டது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருப்பதால் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க.வினருக்குள் மல்லுக்கட்டே நடந்து வருகிறது. இதில், உட்கட்சி கோஷ்டி மோதல் அரங்கேறி வருகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கவுன்சிலர் சீட்டை கைப்பற்றுவதில் தி.மு.க. நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், 2 கொலைகள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கான்ட்ராக்ட் கைப்பற்றுவதிலும் கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில்தான், பூத் கமிட்டி அமைப்பதில் ஏற்பட்ட விரோதத்தில் சொந்தக் கட்சி நிர்வாகியையே தி.மு.க.வினர் தாக்கி இருக்கிறார்கள்.
சென்னை ராமாவரம் பகுதியின் 155-வது வட்ட துணைச் செயலாளராக இருப்பவர் டேவிட். தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பதில் டேவிட்டுக்கும் தென்சென்னை மாவட்ட தி.மு.க. துணை அமைப்பாளர் ரமேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், சம்பவத்தன்று டேவிட் ராமாவரம் கட்சி அலுவலகத்தில் இருந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த ரமேஷ், மூர்த்தி, சேட் உள்ளிட்ட சுமார் 20 பேர், டேவிட்டை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில், பலத்த காயமடைந்த டேவிட், கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ரமேஷ் உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். சொந்தக் கட்சி நிர்வாகியை தி.மு.க.வினர் தாக்கிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.