கோவையில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை தி.மு.க.வினர் பிடுங்கி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் நகர தி.மு.க. செயலாளராக இருப்பவர் விஸ்வபிரகாஷ். இப்பேரூராட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர்தான், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் நகரத்தில் இருந்த பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்திருக்கிறார். அதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதேபோல, கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. எனவே, நகரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் அனைத்து போஸ்டர்கள், பேனர்களை அந்தந்த கட்சியினரே அகற்றுக் கொள்ளும்படி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு 10 நாட்கள் கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்தந்த கட்சிகள் பேனர், போஸ்டர்களை அகற்றிவிட்டன. ஆனால், தி.மு.க.வினர் மட்டும் போஸ்டர், பேனர்களை அகற்றாமல் இருந்தனர். குறிப்பாக, கோவை – அவினாசி சாலையில் உள்ள மேம்பால தூண்களில் ஏராளமான தி.மு.க. போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர், தி.மு.க. போஸ்டர்களை மாநகராட்சி நிர்வாகமும், போலீஸாரும் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே அகற்றுவோம் என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து மறுநாள் இரவு மேற்கண்ட இடத்தில் பா.ஜ.க.வினர் திரண்டனர். இதையறி்ந்து போலீஸாரும் குவிக்கப்பட்டனர். தகவலறிந்து தி.மு.க.வினரும் அங்கு திரண்டனர்.
அப்போது, தி.மு.க. போஸ்டர், பேனர்களை பா.ஜ.க.வினர் கிழித்து எறிந்தனர். இதை தடுக்க முயன்ற போலீஸாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், தி.மு.க.வினரும் போலீஸாருடன் சேர்ந்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முதல்நாள் பா.ஜ.க..வினர் கிழித்த போஸ்டர்களுக்கு பதிலாக மறுநாள் புதிய போஸ்டர்களை தி.மு.க.வினர் ஒட்டினர். இந்த சமயத்தில்தான், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பங்களை தி.மு.க. நகர தலைவரும், பேரூராட்சித் தலைவருமான விஸ்வபிரகாஷ், பிடுங்கி எறிந்திருக்கிறார். அப்போது, அவர் இது என் ஊருடா, பிடுங்கி எறிடா என்று ஏதோ தனக்குச் சொந்தமான ஊரைப்போல அறைகூவல் விடுப்பது வீடியோவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. மேலும், தி.மு.க.வினரின் இந்த அராஜகத்தை வீடியோ எடுத்த நபரையும் விஸ்வபிரகாஷ் மிரட்டுவதும் பதிவாகி இருக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.