கோவையில் கார் வெடிப்பு சதிச் செயல் அரங்கேறிய பரபரப்பு அடங்குவதற்குள், மங்களூருவில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23-ம் தேதி அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் இது சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து என்று கருதப்பட்ட நிலையில், தடயவியல் சோதனையில் காருக்குள் ஆணி, பால்ரஸ் மற்றும் கோலி குண்டுகள் சிதறிக் கிடந்ததால் இது ஒரு சதிச் செயல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவ்வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. என்.ஐ.ஏ. விசாரணையில் இச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத சதி என்பது உறுதியானது. மேலும், இதை உறுதிப்படுத்தும் வகையில், ஜமேஷா முபின் இறந்தது தீயினால் அல்ல, ஆணி இருதயத்தில் குத்தி விபத்து ஏற்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அதேபோல, ஜமேஷா முபின் வீட்டிலிருந்து சுமார் 5 பேர் மர்ம பொருள் ஒன்றை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது. இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருந்து வருகின்றனர். தவிர, கோவையில் 20 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி, 100-க்கும் மேற்பட்டோர் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், கோவை கார் வெடிப்பு சம்பவம் போல கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் மங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த பயணியும், டிரைவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோவுக்குள் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், குக்கருக்குள் பேட்டரி, வயர்கள், சர்க்கியூட் ஆகியவை இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆட்டோ வெடிவிபத்து சம்பவம் திட்டமிட்ட சதி என்று கர்நாடக மாநில டி.ஜி.பி. தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘ஆட்டோவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல, கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத செயல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது குறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய ஏஜென்ஸிகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பினர், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டித் தருவதாகவும், முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத பயிற்சி அளித்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும், ஹவாலா போன்ற பணப்பரிமாற்ற மோசடியில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பி.எஃப்.ஐ. நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நாடு முழுவதும் மாஸ் ரெய்டை நடத்தியது என்.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பு. அப்போது, சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்ததோடு, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. இதில், ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பான ஆவணங்களும் அடக்கம். இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ. கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், பி.எஃப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த சூழலில்தான், தமிழகத்தின் கோவையில் கார் வெடிப்பு சதிச் செயல் அரங்கேறியது. தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. எனவே, மேற்கண்ட பயங்கரவாத செயல்களுக்கும், தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கும் தொடர்பு இருக்குமோ என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.