கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த அமைப்பினர், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த அலுவலகங்களுக்கும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தற்போது அந்த பரபரப்பு அடங்கி சகஜ நிலைக்குத் திரும்பி இருக்கும் நிலையில், இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இந்து முன்னணி அமைப்பில் இருந்து வரும் இவர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில், நேற்று இரவு மனைவி மாலதி, மகன் இனியன் ஆகியோருடன் சக்கரபாணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் முன்பு திடீரென ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. எழுந்து வந்து பார்த்தபோது, திரியுடன் கூடிய பெட்ரோல் பாட்டில் ஒன்று உடைந்து கிடந்திருக்கிறது.
இதையடுத்து, கும்பகோணம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ரவளி ப்ரியா, டி.எஸ்.பி. சுவாமிநாதன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இதனிடையே, தகவலறிந்த இந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் சக்கரபாணி வீட்டின் முன்பு திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பதும், எதற்காக வீசினார்கள் என்பதும் தெரியவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.