பணம், பரிசுப் பொருட்களை வழங்கியும், ஆசைகாட்டியும் கட்டாய மதமாற்றம் செயவது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் மதமாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அதிகளவில் மதமாற்றம் நடைபெறுகிறது. உதாரணமாக, பள்ளிகளில் கல்வி அளிப்பதின் மூலம் சிறார்களும், பணம், பரிசுப் பொருட்களை வழங்கி பெரியவர்களும் மதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஒரு சில இடங்களில் மிரட்டியும் மதமாற்றம் செய்து வருகிறார்கள். தவிர, தொண்டு செய்வதாகக் கூறி, மதமாற்றம் செய்வதும் நடைபெறுகிறது. எனவே, பணம், பரிசுப் பொருட்களை வழங்கியும், மிரட்டியும் மதமாற்றம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடந்த விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “கட்டாய மதமாற்றம் தொடர்பாக மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு தகவல்களை திரட்டி வருகிறது. எனவே, விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், “இந்தியாவில் வசிப்பவர்கள் இந்திய பண்பாட்டுக்கு ஏற்க நடந்துகொள்ள வேண்டும். பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதமாற்றம் செய்வது மிகவும் ஆபத்தானது. அதேபோல, தொண்டின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது. கட்டாய மதமாற்றம் என்பது நாட்டில் தீவிர பிரச்னையாக இருந்து வருகிறது. இது அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது” என்று தெரிவித்தனர். பின்னர், மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல் பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து விசாரணையை வருகிற 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.