1995-ம் ஆண்டு தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்திருந்த மோடி, இன்று பாரதத்தின் பிரதமராக இருக்கிறார் என்பதை விவரிக்கும் வகையிலான போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1995-ம் ஆண்டுதான் பா.ஜ.க. முதன்முதலாக குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது, அம்மாநிலத்தின் முதல்வராக கேசுபாய் படேல் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் எல்.கே.அத்வானி, பைரோன் சிங் ஷெகாவத், ஆனந்தி பெண் படேல், ஷங்கர் சிங் வகேலா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த காலகட்டத்தில் தற்போது பாரத பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்தார். ஆனாலும், அந்நிகழ்ச்சியில் அவருக்கு இருக்கை வழங்கப்படவில்லை. முக்கியத் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க, மோடியோ சாதாரணமாக தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்திருக்கிறார்.
இந்த படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் அனைவருமே பிற்காலத்தில் மிகப்பெரிய பதவியை வகித்தவர்கள். எல்.கே.அத்வானி 5 முறை எம்.பி., மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமராக இருந்தவர். பைரோன் சிங் ஷெகாவத், ராஜஸ்தான் முதல்வராகவும், துணை ஜனாதிபதியாகவும் இருந்தவர். ஷங்கர் சிங் வகேலா பா.ஜ.க.விலிருந்து விலகினாலும், முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஆனந்தி பெண் படேல் எம்.பி.யாகவும், குஜராத் முதல்வராகவும் இருந்தவர்.
அந்த வகையில், 1998-ம் ஆண்டு தேசிய தலைவரான மோடி, முதன் முறையாக 2002-ம் ஆண்டு குஜராத் முதல்வரானார். இதன் பிறகு நடந்த 2007 மற்றும் 2012 தேர்தல்களில் வெற்றிபெற்று முதல்வராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானார். தற்போது 2019 தேர்தலிலும் வெற்றிபெற்று 2-வது முறையாக பிரதமராக இருக்கிறார். இந்த சூழலில், இந்த பழைய படத்தை யாரோ எடுத்து, மோடியின் வளர்ச்சியைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த போட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது.