ஏரியில் மணல் திருடியதை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மீது தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ளது மீனம்பூர் கிராமம். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்வர் பாஷா. இவர் மீனம்பூர் ஊராட்சியில் உள்ள ஏரிகளில் மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்க யாரும் முன்வராத நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மண் திருட்டு குறித்து, போஸ்டர் அச்சடித்து செஞ்சி பகுதி முழுவதும் ஒட்டி இருக்கிறார்கள். அந்த போஸ்டரில், “தமிழக அரசே ஏரி மணல் கொள்ளையில் ஈடுபடும் மீனம்பூர் ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடு! போகுது போகுது ஏரி மணல் கொள்ளை போகுது. நடக்குது நடக்குது ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் நடக்குது. கண்டுகொள்ளாத விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், செஞ்சி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர். இப்படிக்கு ஊர் பொதுமக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, இச்சம்பவம் பரபரப்பான நிலையில், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மீனம்பூர் கிராமத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றனர். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் சிலரும், ஊர் பொதுக்களும் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்க முன்வந்தனர். இதையறிந்த, தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் முன்வர் பாஷா மற்றும் அவருடைய மகன் லியாகத் அலி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். பின்னர், பேட்டி கொடுக்க முன்வந்தவர்களிடம் பேட்டி கொடுக்கக் கூடாது என்று மிரட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் காரில் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், அவர்களது காரை வழிமறித்து, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது முனவர் பாஷா அண்ட் கோ. இதனை வீடியோ எடுக்க முயன்ற நிருபர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து, செய்தி சேகரிக்க விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள், தி.மு.க.வினரின் அராஜக செயலை வசைபாடி வருவதோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அரங்கேறி வரும் அராஜகங்களையும் கண்டித்து வருகின்றனர்.