தி.மு.க. துணை மேயரை காங்கிரஸ் மேயர் கண்ணீர் சிந்த வைத்த சம்பவம் கும்பகோண மாநகராட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் காங்கிரஸ் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க. துணை மேயர் சு.ப. தமிழழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, மேயர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
மாநகராட்சி மேயராக பதவியில் இருக்கும்போது, துணை மேயராக பொறுப்பு வகிக்கும் சு.ப.தமிழழகனை மாநகராட்சியின் செயல் தலைவர் என்று குறிப்பிட்டு மாநகராட்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இதனால், தனது பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தி.மு.க. உறுப்பினர்கள் தமக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, துணை மேயர் சு.ப.தமிழழகன் இவ்வாறு பேசினார் ;
நான் தி.மு.க.வுக்கும் கட்சி தலைவருக்கும் விசுவாசமாக இருந்து வருகிறேன். கும்பகோணம் மேயர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது நான் சென்னைக்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தேன். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் மேயர் பதவி உனக்கு கிடைக்காததில் வருத்தம் இல்லையே தமிழ் என என்னிடம் கேட்டார். அந்த வார்த்தை ஒன்றே எனக்கு ஆறுதலாக இருந்தது. எனக்கு, அது ஒன்றே போதும் என கூறி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.