சாவர்கர் எங்களுக்கு கடவுளைப் போன்றவர். அவரை அவமரியாதை செய்வதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராகுல் காந்திக்கு கூட்டணிக் கட்சித் தலைவரான உத்தவ் தாக்ரே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மோடி சமூகத்தை அவதூறாகப் பேசிய ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், மன்னிப்புக் கேட்பதற்கு எனது பெயர் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி என்று கூறியிருந்தார். இது சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சாவர்க்கரை பற்றி தொடர்ந்து இழிவாகப் பேசினால், ராகுல் காந்தி பொதுவெளியில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸின் கூட்டணிக் கட்சித் தலைவரே ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாவிகாஸ் கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இந்த சூழலில், மாலேகான் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, “ராகுல் காந்தியிடம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சாவர்க்கர் எங்களுக்கு கடவுளைப் போன்றவர். அவரை அவமரியாதை செய்வதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. கூட்டணியில் பிளவு ஏற்படும் வகையில் கருத்துக்களை நீங்கள் பேசக்கூடாது. சுதந்திர போராட்டத்தில் சாவர்க்கர் அடைந்த துன்பத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்று சொல்லி, ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுதான் தற்போது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.